நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மாலையில் தொடங்க உள்ள நிலையில், அங்கு காலையிலேயே லட்சக்கணக்கில் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விஜய்யின் மாநாட்டில் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, முத்துராமலித்தேவர் உள்பட பல்வேறு சமுதாய தலைவர்களின் படங்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி அக்கட்சியின் முதல் மாநாட்டை இன்று நடத்துகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் முதல் மாநாடு என்பதால் இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்காக உணவு, குடிநீர் வசதி என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே தவெக மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.
தவெக மாநாடு இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்க உள்ளது. இருப்பினும் இதற்காக நேற்று இரவில் இருந்தே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. சிலர் இரவு அங்கு வந்து தங்கிவிட்டனர். இந்த நிலையில், இன்று மாலை நடக்க உள்ள மாநாட்டுக்கு தற்போதே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடியது மட்டுமின்றி அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள த.வெ.க. மாநாட்டில், இதுநாள் வரை யாரும் செய்யாத விஷயத்தை நடிகர் விஜய் செய்திருக்கிறார். அதாவது, நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் இயக்கம் அனைத்து சாதியினரையும் அரவணைத்துச் செல்லும் என்பதை மாநாட்டில் இடம்பெற்றுள்ள சமுதாய தலைவர்களின் படமே சொல்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் பெரும்பான்மையாக முக்குலத்தோர், கவுண்டர், முத்தரையர், வன்னியர் ஆகியோர் தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சமுதாயத்தினர்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள். இவர்களுடைய தலைவர்களின் படத்தை விஜய் போட்டிருப்பதுதான், அச்சமுதாயத்தினரை மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது-.
தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது… அந்த வெற்றிடத்தை விஜய் நிச்சயம் நிரப்புவார் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!