‘விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு நடக்கிறது. இனியாவது அ.தி.மு.க. விழித்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அ.தி.மு.க. என்ற இயக்கமே காணாமல் போய்விடும்’ என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார் மருது அழகுராஜ்!

இது தொடர்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருது அழகுராஜ தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘2005-ல் தி.மு.க., அ.தி.மு.க. என்கிற இரு துருவ அரசியலுக்கு மாற்று நான் தான் என்பதை முன்வைத்து விஜயகாந்த் களத்திற்கு வந்தார்.
2006 – சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.33 சதவீத வாக்குகளோடு ஒரே ஒரு தொகுதியாக விருத்தாசலத்தில் தனது சட்டமன்ற தேர்தல் வெற்றியையும் அவர் பதிவு செய்தார்.
ஆனால் அந்த ஒரு தேர்தலோடு தனித்து போட்டி என்பதை தாக்குப்பிடிக்க முடியாமல் 2011-ல் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி எதிர்க்கட்சி இருக்கையை பெற்றதோடு தான் முன் வைத்த மாற்றத்திற்கான அரசியலை அவரே முடிவுக்கு கொண்டு வந்தார்.
இப்போது 2024-ல் நடிகர் விஜய் அதே தி.மு.க.- , அ.தி.மு.க. என்கிற இருதுருவ அரசியலுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த அரசியல் கட்சி தொடங்கி தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ல் நடத்துகிறார்.
அன்றைக்கு விஜயகாந்தின் வளர்ச்சிக்கு தடை போட்ட புரட்சித்தலைவி அம்மா, கலைஞர் என்கிற ஆளுமைகள் இன்றைக்கு இல்லை.
ஆனாலும் அன்று விஜயகாந்தின் கட்சிக்கு தி.மு.க.வில் இருந்து பெரிய அளவில் யாரும் போகாத நிலையில் புரட்சித்தலைவி அம்மாவின் 1991- கால முதல் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணன், கல்வி அமைச்சராக இருந்த மருங்காபுரி பொன்னுச்சாமி ஆஸ்டின் மட்டுமல்லாது அண்ணாவின் அரசியல் பாசறையில் பயின்ற பண்ருட்டி ராமச்சந்திரனே விஜயகாந்துடன் இணைந்து அக்கட்சிக்கு அவைத்தலைவர் ஆனார்.
ஆனால் இன்று புரட்சித்தலைவி அம்மா இல்லாத நிலையில் அ.தி.மு.க. பிளவுபட்டு கிடக்கும் சூழலில்
நடிகர் விஜய்யி ன் அரசியல் பிரவேசம் அ.தி.மு.க.வை பெருமளவில் சரிக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் ஆரூடர்கள்.
மேலும் உதயநிதியை திமுக முன்னிறுத்துவதன் மூலம் ஸ்டாலின்ஸ்s மற்றவர்கள் என்றிருந்த அரசியல் களத்தை
உதயநிதி ‘வெர்சஸ்’ விஜய் என்பதற்கான சூழலை திமுகவே உருவாக்கித் தருவதும் விஜய்க்கு கூடுதல் சாதகமே என்கின்றனர்.
இதே விக்கிரவாண்டியில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி- ஓ.பி.எஸ். ஆகியோரது இரட்டை தலைமை சுமார் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்றால்
அதே விக்கிரவாண்டியில் தனது ஒற்றைத் தலைமையை நிரூபிப்பதற்கு அச்சப்பட்டு இடைத்தேர்தலையே எடப்பாடி புறக்கணித்ததும் இங்கே தான்.
ஆக இப்போது அந்த விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.வின் இடத்தை தனதாக்கிடவே விஜய் தனக்கான அரசியல் களமாக விக்கிரவாண்டியை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது சரி. தலைநகர் நோக்கி வரும் பயணிகளை எல்லாம் நள்ளிரவில் உசுப்பி விட்டு விழிக்க வைக்கும் ஊர் தான் விக்கிரவாண்டி.
அந்த விக்கிரவாண்டி உறங்கி கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை விழிக்க வைக்குமா? இல்லை. எடப்பாடியின் பிடிவாதத்தால் முற்றிலுமாக அழிக்க வைக்குமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆளும் தி.மு.க.வே விஜய்யின் அரசியல் வருகையால் அச்சத்தில் இருக்கும் போது, இருபது சதவீத வாக்குகளை இழந்த எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியிருக்கிறது என்கிறார்கள்!