விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மாலை நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு அதிகமாக அளவில் ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரோட் ஷோ எதுவும் நடத்தக்கூடாது என போலீசார் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் பல புதிய முகங்கள், லைம் லைட்டுக்கு வந்தன. அந்த வரிசையில் தற்போது விஜய்யும் அரசியல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி தலைமையிலான அதிமுக, பல விஷயங்களில் போதுமான அளவுக்கு அரசியல் செய்யவில்லை என்பது ஊர் அறிந்த விஷயம்தான். இதனை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்து வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சியின் பெயர், கொடி, வாழ்த்து பாடல் என அனைத்திலும் தமிழக அரசியல் பிரதிபலித்தது. இந்நிலையில், இக்கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கிறது. மாநாட்டில் சுமார் 50,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் 2500 பேர் வரை மாநாட்டுக்கு அழைத்து வர கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

எனவே நாளை விக்கிரவாண்டி விழாக்கோலமாக மாற இருக்கிறது. ஏற்கெனவே மாநாடு நடந்த திருச்சி செலக்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக இடம் விக்கிரவாண்டிக்கு மாற்றப்பட்டது. இப்படி தொடக்கத்திலேயே சில இடையூறுகள் இருந்ததால், மாநாட்டை கச்சிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மறுபுறம், விஜய்க்கு போலீஸ் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்திருக்கிறது. ரோடு ஷோ நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இதனால் ஷோ நடத்த வேண்டாம் என விஜய்க்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநாட்டின் அப்டேட்: மாநாட்டு திடலில் உணவு விநியோகம் செய்வது குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தாங்கள் அழைத்து வரும் தொண்டர்களுக்கு, அவர்களே உணவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தங்குமிடம் உள்ளிட்டவற்றையும் நிர்வாகிகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

எனவே தென் மாவட்டங்களில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி வருபவர்கள் திருச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரத்தில் குளித்து முடித்துவிட்டு மதியம் 2 மணியளவில் மாநாட்டு திடலில் இருப்பதை போன்று வந்து சேர்வார்கள். அதேபோல மேற்குறிப்பிட்ட நகரங்களில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் புக் செய்யப்பட்டிருக்கின்றன. பல தொண்டர்கள் ரூம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். எப்படி இருப்பினும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட வேண்டும் என்று விஜய்க்கு ஈடாக தொண்டர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal