‘ஆரியம், திராவிடம் இனக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும், வரலாறு குறித்தும் கூற, நீதிமன்றம் ஒன்றும் அதற்கான வல்லுனர் அல்ல; ஆரியம், திராவிடம் கோட்பாடு பற்றி பரப்புவதை நிறுத்த உத்தரவிட முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாணவர் சமூகத்தினர் மத்தியில், பொய்யான ஆரியம், திராவிடம் இனக் கோட்பாட்டை பரப்புவதை நிறுத்துமாறு, கல்வித்துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘ஆரியம், திராவிடம் என்ற பொய்யான இனக் கோட்பாடு குறித்து, கல்வித்துறை பரப்பி வருகிறது. ஆரியம் மற்றும் திராவிடம், மக்களிடையே பிளவை வளர்க்கிறது. ‘இந்த இரு கோட்பாடும் பொய்யானவை என, பல்வேறு அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்’ என்று வாதாடப்பட்டது.
அதற்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘‘பாடத்திட்டத்துக்கு என, குழு அமைக்கப்பட்டு உள்ளது. துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் அடிப்படையில் தான், பாடத்திட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில், மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால், அது பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவு அறிவிக்கப்படும்’’என்றார்.
துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ‘‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில், மனுதாரர் கோரிக்கை மனு அளிக்கலாம். அது, உரிய காலத்துக்குள் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், ‘‘வரலாறு அல்லது இரு இனக்கோட்பாடின் தோற்றம் பற்றி கூற, நீதிமன்றம் வல்லுனர் அல்ல. மனுதாரர் பொய்யானது என்று கூறும், இரண்டு இனக் கோட்பாடு செல்லுமா அல்லது செல்லாதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யாமல், இந்த வழக்கில் மனுதாரர் கோரும் நிவாரணத்தை, இந்த நீதிமன்றத்தால் வழங்க முடியாது.
இதை செய்ய வேண்டியது, அத்துறையில் உள்ள நிபுணர்கள் தானே தவிர, நீதிமன்றம் அல்ல. மாநில, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், இவ்வழக்கை கோரிக்கை மனுவாக கருத்தில் கொள்ள வேண்டும். மனுதாரருக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கி, அவர் தரப்பு கருத்தையும் அறிந்து, அதன் மீது 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.