நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுவதாக நீதிபதி கோபம் அடைந்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். பல வழக்குகளில் பிடிவாரண்ட் இருந்தாலும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. நீதிமன்றத்திற்கு வராத அவருடைய சொத்துகளை நீதித் துறை பாதுகாக்க வேண்டுமா என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

கர்நாடக மாநிலம் பிடரியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்தவர் நித்தியானந்தா. இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். இவருக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் பேசுவார். அத்துடன் காமெடியாக சத்சங்கம் நடத்துவார்.

இதனால் இவருக்கு சீடர்கள் அதிகம். இந்த நிலையில் பெங்களூரில் பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நிலையில் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. ஆனால் கைலாசா என்ற ஒரு தீவை விலைக்கு வாங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

அந்த தீவின் அதிபர் தாம்தான் என்றும் அந்த தீவிற்கான தனி பாஸ்போர்ட், கரன்சி, கொடி எல்லாம் அறிமுகப்படுத்தியிருந்தார். தினமும் அவருடைய சேனலில் சத்சங்கம் செய்து வந்தார். எனினும் அதன் ஐபி அட்ரஸ்ஸை வைத்து அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என கணிக்க முடியவில்லை.

அவர் இருக்கும் இடத்தைச் சுற்றி பனிமலைகள் இருப்பது தெரியவந்தது. அதனால் அவர் இருக்கும் இடத்தை கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரால் அரை இட்லி கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவரால் லைவில் வந்து சத்சங்கமும் செய்ய முடியவில்லை. இதையடுத்து அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்றெல்லாம் மக்கள் பேசி வந்தனர். ஆனால் சில பேஸ்புக் பதிவுகளை போட்டு தனது இருப்பை காட்டிக் கொண்டார். எனினும் அந்த பதிவுகளை அவர்தான் போட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றெல்லாம் கூறி வந்தனர்.

ஒரு கட்டத்தில் நித்தியானந்தா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார் என சொல்லப்பட்டது. அப்படி வந்தால் அவரை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இன்று வரை நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதைத்தான் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal