‘‘சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
சேலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: ‘‘சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும், மேலே இருக்கும் சக்கரம் கீழே வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். இந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சியல்ல. எந்தக் கட்சிக்கும் நிரந்தர வெற்றியோ, தோல்வியோ கிடையாது. கூட்டணி பலத்தை தான் தி.மு.க., நம்புகிறது. அவர்களுக்கு தனியாக பலம் இல்லை.
நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். 3 முறை பார்லிமென்ட் உறுப்பினராக போட்டியிட்டேன். அமைச்சர், முதல்வர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் உங்களால் கிடைக்க பெற்றது. என்றைக்கும்,
‘ நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று’ என திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.
எனது வெற்றிக்காக பாடுபட்டவர்களை கண்ணை இமை காப்பது போன்று காப்பேன். இது உறுதி. லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் மக்கள் ஓட்டளிக்கின்றனர். அடுத்து வரும் பைனல் மேட்சில் அ.தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். அ.தி.மு.க.,வின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். கட்டடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதை போல அ.தி.மு.க.,வில் கிளை கழகம் வலுவாக உள்ளது.
எதிரிகள் முதுகை காட்டி ஓடிவிட்டனர். தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள்; எத்தனை முறை வந்தாலும் சேலம் அ.தி.மு.க.,வின் கோட்டை தான். அ.தி.மு.க.,வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வர முடியும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை. போதைப்பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக காவல்துறை தலைமை இயக்குநரே கூறியுள்ளார்’’ என்றவர்,
நிருபர்கள் சந்திப்பில்,‘‘விஜய் ஒரு முன்னணி நடிகர் அவரிடம் ரசிகர் பட்டாளம் உள்ளது. த.வெ.க., முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். பொது சேவை செய்ய நினைத்து விஜய் கட்சி துவங்கியுள்ளார். விஜய் பொதுக் கூட்டத்திற்கு மட்டுமல்ல அ.தி.மு.க., போராட்டங்களுக்கும் தி.மு.க., அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கி உள்ளனர்’’ இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ்., ‘‘தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த பவன் கல்யாணுடன் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டார் சந்திரபாபு நாயுடு. அதே போல் தி.மு.க. ஆட்சியை வீழ்த்த கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்வதைத்தான் மறைமுகமாக பேசியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!