எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குமரியில் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம்..!
கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முக்கிய முகமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறாத நிலையிலும் கூட தளவாய் சுந்தரத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
அப்படிப்பட்ட தளவாய் சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததற்காக தளவாய் சுந்தரத்தின் பதவியைப் பறித்தார் எடப்பாடி. என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை. நீக்கப்பட்டுவிட்டால் ஓகே, ரைட் என்று செல்ல வேண்டியதுதான் என தளவாய் சுந்தரம் அப்போது தெரிவித்தார்.
இந்நிலையில் கிழக்கு மாவட்ட பொறுப்பையும் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கத்துக்கே வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தில் குமரி மாவட்ட அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியால் மாவட்ட செயலாளர்களை கட்சியை விட்டு நீக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆக்ஷன் அனைவரையுமே புருவம் உயர்த்த வைத்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் அதில் கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அலசி இருக்கிறார் நாஞ்சில் கோலப்பன்.
தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தொடக்கூடாத இடத்தை தொட்டுவிட்டார் என்றார்கள். ஆனால், அந்த இடத்துக்கு பொறுப்பாளராக ஜான் தங்கத்தை நியமித்து விட்டார். இப்போது தளவாய் சுந்தரம் மாற்றுக் கட்சிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாவட்ட செயலாளரை கூட எடப்பாடியால் நீக்கமுடியாது என விமர்சிக்கப்பட்டது. தளவாய் சுந்தரத்தை நீக்கி தான் பவர்ஃபுல் என எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
தளவாய் சுந்தரத்தை நீக்கியதன் மூலம், எஸ்.பி வேலுமணிக்கும், சிவி சண்முகத்துக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தளவாய் சுந்தரத்தால் பதவி பெற்ற நான் அவரையே நீக்கிவிட்டேன். அதனால், நீங்கள் இனி கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என மற்றவர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். ஆனால், எடப்பாடியின் இந்த சலசலப்புக்கு யாரும் அஞ்சமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி, இதுவரை சாமியை மட்டும்தான் தொட்டார். சாமி பொறுத்துக்கொண்டது. ஆனால் இப்போது பாம்புப் புற்றுக்குள் கையை விட்டிருக்கிறார். பாம்பு தனது விஷத்தை கொட்டியே தீரும்.
தளவாய் சுந்தரத்தை எதிர்த்து குமரி மாவட்டத்தில் அரசியல் செய்பவன் நான். ஆனால் அதிமுகவை காப்பாற்ற உறுதியாக இருப்பாரே தவிர, திமுகவுக்கோ பாஜகவுக்கோ நிச்சயம் செல்லமாட்டார். எடப்பாடி பழனிசாமியை அகற்றுவதற்கான வேலைகளைச் செய்வார். இப்போதே அதற்கான வேலைகளை தளவாய் சுந்தரம் ஆரம்பித்துவிட்டார்.
ஜான் தங்கத்தை பொறுப்பாளராக நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதற்குப் பின்னணியிலேயே தளவாய் சுந்தரம் இருக்கிறார். ஜான் தங்கம் தலைமையில் மாலை போட முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான பச்சைமால் போகவில்லை, அவர் தனியாக போய் மாலை போட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி நியமித்த ஒருவருக்கு மரியாதை இல்லை, அவரை நீக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை அவ்வளவு தானா என இன்றைக்கு தளவாய் சுந்தரம் கேட்டிருக்கிறார்.
தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் இப்போது குமரி மாவட்டத்தில் ஒதுங்கி நிற்கிறார்கள். நீங்கள் யாரை பொறுப்பாளராக போட்டாலும் கட்சியை அங்கு ஒருங்கிணைக்க முடியாது. நிறைய பேர் விலகுவார்கள். அதனால் தான் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலிக்குச் சென்று 53வது ஆண்டு விழா கூட்டத்தை நடத்தி கட்சியினரை அரவணைக்க முயற்சிக்கிறார். ஆனால் அது பலிக்கவில்லை. தளவாய் சுந்தரத்தின் விளையாட்டை கூடிய சீக்கிரம் பார்ப்போம் என்கிறார் கோலப்பன்!