2026ல் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும்? இல்லாவிட்டால் வீழ்ச்சிதான் என்கிறார் பிரபல தேர்தல் வியூக நிபுணர் ஒருவர்..!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு விழா அதிமுகவினரால் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ‘‘எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026இல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’’ என்றும் தெரிவித்து இருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு சேதி சொல்லும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜெயலிதாவின் மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட ‘துரோகம்’ தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது’’ என காட்டமாக விமர்சித்திருந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எழுச்சியடைவாரா? வீழ்ச்சியடைவாரா? என தேர்தல் வியூக நிபுனர் ஒருவரிடம் பேசினோம்.
‘‘சார், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்தித்தாலும், அவருக்கு மிகப்பெரிய தோல்வி கிடையாது. காரணம், கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. அதன் பிறகும் எதிர்க்கட்சி சிம்மாசனத்தில் அமர்ந்தால் எடப்பாடி பழனிசாமி. இதற்குக் காரணம், அப்போதைய தேர்தலில் எடப்பாடிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த சுனில்தான்!
2006 முதல் 2011 வரை ஆட்சி புரிந்த தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஆனால், பத்து ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி புரிந்து எதிர்க்கட்சி வரிசையில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்தார். அதற்கு காரணம் கட்சி ஒற்றுமை, தேர்தல்¢ வியூகம்!
அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி ‘கூட்டணி முடிவை’ சரிவர எடுக்கத் தயங்கினார். காரணம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று ஒருவர் கூறியதை நம்பி, பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்தார். ஆனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தது.
தவிர, தேர்தல் வியூகம் வகுப்பதிலும் சொதப்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பிரபல யுடியூபர் ஒருவரை நம்பினார். அவர் அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக வேலை பார்க்கவில்லை. தி.மு.க.வின் மலைக்கோட்டை மன்னர், திருவண்ணாமலை ‘ஜோதி’! என தி.மு.க.வின் முக்கியமான வி.ஐ.பி.க்களிடம் பணம் வாங்கிக்கொண்டார். சில இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு வேலை பார்த்தார். எடப்பாடி பழனிசாமி அந்த யுடியூபரை நம்பியது மிகப்பெரிய தவறு என்பதை இன்றுவரை உணர்ந்ததாக தெரியவில்லை.
2026க்கு வருவோம்… தி.மு.க.வினர் 200 தொகுதிகளை டார்கெட் வைத்து காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க.வில் ‘எந்தத் தியாகமும் செய்யத் தயார்!’ என எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறாரே தவிர, அதற்கான வேலைகளில் இறங்கவில்லை.
‘தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழும்’ என எதிர்பார்க்கிறார். ஒரு கட்சியின் தலைவர் அப்படி எதிர்பார்க்கக்கூடாது. அதாவது கிரிக்கெட்டில்தான் ‘பங்களாதேஷிடம் ஆஸ்திரேலியா தோற்றால் இந்தியா ஃபைனலில் நுழையும்’ என்பார்கள். பங்களாதேஷிடம் ஆஸ்திரேலியா தோற்குமா?’ அப்படித்தான் எடப்பாடியின் கணக்கும் இருக்கிறது.
2026ல் அ.தி.மு.க.வில் பிளவில்லை என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும்… பா.ம.க., தே.மு.தி.க., நாம்த மிழர் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வலுவான கூட்டணி அமைக்கவேண்டும். அதே போல் தேர்தல் வியூகம் வகுப்பதற்கு அ.தி.மு.க.விற்கு விஸ்வாசமாகவும், உண்மையாகவும் வேலை செய்யக்கூடிய ஒரு டீமை எடப்பாடி நியமிக்கவேண்டும். இதனை செய்தால் எழுச்சி பெறலாம்… இல்லாவிட்டால் வீழ்ச்சிதான்…’’ என்றார்.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி என பொறுத்திருந்து பார்ப்போம்..?