அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று அக்கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர்தான் திமுகவின் அடுத்த வாரிசாம்.. இது என்ன மன்னர் பரம்பரையா? குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் நடத்துகிறீர்களா? திமுகவில் வேறு யாரும் துணை முதல்வர் பதவிக்கு வரக்கூடாதா?

கருணாநிதி குடும்பத்தில் ஆண் பிள்ளையாக பிறந்தால் அவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டுமா? வேறு யாரும் ஆட்சி செய்யக்கூடாதா? கருணாநிதி குடும்பத்தில் மட்டும் தான் அப்படி என்பது இல்லை. எல்லா அமைச்சர்கள் குடும்பத்திலும் அப்படித்தான். அமைச்சர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் எம்.எல்.ஏ.வாக, எம்.பியாக வர முடியும்.

ஆனால், அதிமுகவில் அப்படி அல்ல. மேடையில் உள்ள யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எந்த பதவிக்கும் வர முடியும். நானும் ஒரு காலத்தில் மேடைக்கு கீழ்தான் நின்றிருந்தேன். நான் முதல்வராக வரவில்லையா? இது அதிமுகவில் மட்டும்தான் முடியும். அதிமுகவில் உழைத்தால் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். ஒரு சாதாரண விவசாயியை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கிய கட்சி அதிமுக தான்.

வேறு எந்த கட்சியிலும் இப்படி சாதாரண நபர் உயர் பதவிக்கு வர முடியாது. திமுகவில் இருப்பவர்களால் முன்னுக்கு வர முடியாது. பின்னோக்கிதான் செல்ல முடியும்” என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து, “500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. அதிமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுகவின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கிறது.

திமுக கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அதிமுக தனது சொந்தக் காலில் நின்று வருகிறது. சொந்தக் காலில் நிற்பவர்களுக்கு தான் பலம் அதிகம். கூட்டணி முறிந்துவிட்டால் திமுகவின் கதை முடிந்துவிடும்.

இப்போதே திமுக கூட்டணி கட்சிகள் புகைச்சலை கிளப்ப ஆரம்பித்துவிட்டன. எவ்வளவு காலத்திற்குதான் திமுகவை தாங்கிப் பிடிப்பார்கள். விரைவில் கூட்டணியில் இருந்து வெளியேறப் போகிறார்கள். திமுக அரசின் குறைகளை கூட்டணிக் கட்சிகளே மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன” என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal