சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்றும், நாளையும் தரிசனத்திற்கு 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. வரும் 21ம் தேதி இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும்.
வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும். மாத பூஜைகளின்போது பக்தர்கள் குறைவாகவே வருவார்கள். மாத பூஜை நடைபெறும் நாட்களில் அதிகபட்சமாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட அன்று முதலே பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது. நேற்று தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்றும், நாளையும் 52 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் இந்த இரு நாட்களிலும் தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஐப்பசி மாதத்திலேயே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் மண்டல காலம் தொடங்க உள்ள அடுத்த மாதம் பக்தர்கள் மிக அதிக அளவில் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.