சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டிய நிலையில், இன்று காலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 6 செ.மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இதைத் தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16, 17 ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், இராணிப்பேட்டை சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த மழைக்கான மேகக்கூட்டங்கள் தயாராகி வருகின்றன, இப்போது அவை நகரும். இன்று அதிக மழைக்கான மேகக் கூட்டங்கள் வந்து இறங்கும். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், சென்னையில் ஒரு மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியது.
வடபழனி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவானது. வேளச்சேரி, ராயப்பேட்டை, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், அண்ணா நகர், ராயபுரம், பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், மணலி பகுதிகளிலும் 5 செ.மீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவானது. சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி, கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மழை பெய்த நிலையில், அதிகாலை மழை ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் இடியுடன் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே நேற்று நள்ளிரவிலும் உதயநிதி நேரடியாக சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.