தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுவென நடந்து வருகிறது.

நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநாடு நடைபெறும் தேதிக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு, விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தங்குவதற்காக ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் இரட்டிப்பு வாடகை பெற்று முன் பதிவாகி விட்டது என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் மேடை பணி முடிந்து விடும் என பந்தல் அமைப்பாளர் கூறினார். மாநாட்டு பணிகள் குறித்து சினிமா பிரபலங்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர். நேற்று நடிகர் தாடி பாலாஜி மாநாட்டு திடலை பார்வையிட்டுச் சென்றார். திடலை சுற்றி கொடி கம்பங்கள் நடும் பணி துவங்கியுள்ளது.

மாநாட்டு திடலில் பாதுகாப்பு பணி ஏற்பாடுகள் துபாய் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, துபாய் பாதுகாப்பு கம்பெனி நிர்வாகிகளுடன் திடலை சுற்றிப் பார்த்து பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை செய்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal