முரசொலி செல்வத்தின் உடலைப் வீடியோ காலில் பார்த்து மு.க.அழகிரி உடைந்து போய் அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

கருணாநிதியின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர், முதல்வர் ஸ்டாலினின் மாமா என்ற குடும்ப உறவுகள் இருந பின்னணியையும் தாண்டி, முரசொலி செல்வம் திமுகவில் முக்கியமானவராக இருந்தார். முரசொலியில் வரும் சிலந்தி தொடரை இவர் தான் எழுதிவந்தார். தன்னுடைய தாய் மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை முரசொலி செல்வம் திருமணம் செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம்.

முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார். செல்வி – முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் உள்ளனர். பெங்களூரில் நேற்று காலை முரசொலி நாளிதழுக்காக கட்டுரை எழுதியவர், அப்படியே கண் அயர்ந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே முரசொலி செல்வம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.” என கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தார்,

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணணுமாகிய மு.க.அழகிரி வெளிநாட்டில் இருப்பதால், முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரஇயலவில்லை. இதனால் வீடியோ காலில் வந்து முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். முரசொலி செல்வத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மு.க.அழகிரி உடைந்து அழுதபடியே இருந்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

முரசொலி செல்வத்தின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal