மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்ட சலூன் கடைக்காரரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சுமார் 471 நாட்கள் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பலமுறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டன. செந்தில் பாலாஜியின் விடுதலையை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. அதேபோலவே, அமைச்சரவை மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி செந்தில் பாலாஜியின் தொண்டர்களை குஷிப்படுத்தியது.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 5 கட்சி அம்மாவாசை போன்ற அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக சலூன் கடைக்காரரை சாய்பாபா காலனி காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிபட்டவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த விஸ்வேஷ்குமார் (40) என்பது தெரியவந்துள்ளது. இவர் கோவை மாநகரில் உள்ள வேலாண்டிபாளையத்தில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இவர், தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் ராஜமாணிக்கம் என்பவர் விஸ்வேஸ்குமாரிடம் கேட்ட பொழுது அவரை தகாத வார்த்தைகள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ராசமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விஸ்வேஸ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் ராஜமாணிக்கம் (47) என்பவர் சாய்பாபா காலனி போலீஸில் புதன்கிழமை இரவு புகார் அளித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிராக விஸ்வேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் புதன்கிழமை மாலை தவறான செய்தியைப் பதிவிட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து ராஜமாணிக்கம் விஸ்வேஷ்குமாரிடம் விசாரித்தபோது,அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், விஸ்வேஷ்குமார் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 296 (பி), 351 (3) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, விஸ்வேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.