முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருப்பதுதான், அ.தி.மு.க.வில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது. ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது முதலமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். சசிகலா உடனான மோதல் போக்கு, எடப்பாடியின் ஆளுமை என அதிமுகவில் பல பிரச்சினைகளை சந்தித்த அவர் தற்போது அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். கட்சி வேட்டியை கூட கட்ட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்திய அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட முடியவில்லை. தொடர்ந்து தொண்டர்கள் மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ஓபிஎஸ், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இப்படியாக சில மாதங்களாக ஓபிஎஸ் அரசியலில் இருக்கிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்த நிலையில் தான் திடீரென ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது பலரை கவனிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சில சீனியர்கள் போர் கொடி தூக்கி இருப்பதாகவும்,சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சீனியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதனை திட்டவட்டமாக மறுத்தது. இருந்த போதும் அதிமுகவில் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட முடியாது என்கின்றனர். இதற்கிடையே திடீரென நேற்று முன்தினம் காலை ஓ.பன்னீர்செல்வம் மதுரையிலிருந்து டெல்லிக்கு பறந்து இருக்கிறார். அங்கு மதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாகவும், அதிமுகவில் மீண்டும் இணைவதா அல்லது அல்லது பாஜகவில் சேர்வதாக என்பது குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இதுவரை பாஜக தலைவர்கள் யாரையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஏற்கனவே அவரது இரு மகன்களும் டெல்லியில் இருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது வரை அவருக்கான அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் நிச்சயம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் ஜேபி நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை ஓபிஎஸ் சந்திப்பது உறுதி என்கிறார்கள்.

மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதே பாஜக டெல்லி தலைமையில் யோசனையாக இருக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தடையாக இருக்கும் நிலையில் அவரது அணியில் இருக்கும் சில சீனியர்களை தூக்க முடியுமா என்பதற்காகவே ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இப்படியாக இதுவரை அமைதியாக இருந்த ஓபிஎஸ் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது அதிமுகவினரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal