சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144வது வட்டச் செயலாளரும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 & 2011 தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களின் அடாவடியால்தான் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போனது. தற்போது அந்த நிலைமை வந்து விடக் கூடாது என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மாநகராட்சிகளைத் தவிர ஊராட்சி ஒன்றிய பெண் சேர்மன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தை அவர்களது கணவன்கள் பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தி.மு.க. தலைமை பெண் சேர்மன்களின் அதிகாரத்தில் குறுக்கிடும் கணவர்களுக்கு கடிவாளம் போடவேண்டும் என மலைக்கோட்டையில் இருந்து தொடர்ந்து குரல் எழுந்து கொண்டிருக்கிறது.