பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் எனவும் கூறியுள்ளார்.
பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ.க, காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக நீண்ட நாட்களாக கூறி வந்தார்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சிக்கு ‘ஜன் சுராஜ்’ என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ள இவர், ‘‘வரும் தேர்தலில் பீஹாரில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும், ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வேன்; மதுக்கடைகளை திறப்பேன்’’ என உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘‘பீஹார் மக்களுக்கு மாற்று அரசியலை அளிப்போம். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது’’ இவ்வாறு அவர் கூறினார்.