‘உங்களது மகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைக்கிறீர்கள்… மற்ற பெண்களை சந்நியாசியாக மாற ஊக்குவிப்பது ஏன்?’ என ஜக்கி வாசுதேவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரவேண்டி காமராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். மூளைச்சலவை செய்யப்பட்டு தனது மகள்கள் அங்கே தங்க வைக்கப்பட்டு இருப்பதாக காமராஜ் கூறியுள்ளார் அவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்றுநடந்தது .

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ், தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து உள்ளார். அவள் வாழ்க்கையில் நல்லபடியாக செட்டிலாகிவிட்டார் என்பதை உறுதி செய்த பின் மற்ற இளம் பெண்களை தலையை மொட்டை அடிக்க ஊக்குவிக்கிறார். உலக வாழ்க்கையைத் துறக்கவும், தன் யோகா மையங்களில் துறவிகளைப் போல வாழவும் ஏன் ஊக்குவிக்கிறார்.. ஏன் அவர் இப்படி எல்லாம் செய்கிறார்? என்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வி. சிவஞானம் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் (69) என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு (எச்சிபி) விசாரணையின் போது நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பினர். 42 மற்றும் 39 வயதுடைய தனது நன்கு படித்த இரண்டு மகள்கள் ஈஷா யோகா மையத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு “மூளைச் சலவை” செய்யப்பட்டதாக மனுதாரர் கூறியிருந்தார்.

ஈஷா மையத்தில்.. வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் இருவரும் நேற்று டிவிஷன் பெஞ்ச் முன் ஆஜராகி, கோவை வெள்ளிகிரி மலையடிவாரத்தில் உள்ள யோகா மையத்தில் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருந்ததாகவும், தங்களை யாரும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினர். எங்களை யாரும் மூளை சலவை செய்யவில்லை என்று கூறினார்.

ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய நீதிபதிகள், இந்த பிரச்சினையை மேலும் விசாரிக்க முடிவு செய்தனர். நீதிபதிகளின் இந்த முடிவால் ஆச்சரியமடைந்த ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ராஜேந்திர குமார், வழக்கின் எல்லையை நீதிமன்றத்தால் விரிவாக்க முடியாது என்றார்.

ஆனால் நீதிபதி சுப்பிரமணியம், அரசியலமைப்பின் 226 வது பிரிவின் கீழ் உள்ள ரிட் அதிகார வரம்பைப் பயன்படுத்தி நீதிமன்றம் முழுமையான நீதியை வழங்க முடியும். மேலும் வழக்கின் அடிப்பகுதிக்கு வர வேண்டியது அவசியம். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சில சந்தேகங்கள் இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.​​மேலும், தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நல்லபடியாக வாழவைத்தவர், பிறருடைய மகள்களை தலையில் அடித்துக்கொண்டு வாழ்க்கையை வாழத் தூண்டுவது ஏன் என்பதை அறிய விரும்புகிறோம். ஒரு துறவி ஏன் இப்படி செய்கிறார்.. தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்த ஜக்கி வாசுதேவ், மற்ற பெண்களை சந்நியாசியாக மாற ஊக்குவிப்பது ஏன்? மற்ற பெண்களை பற்றி யோசிக்காமல்.. அவர்களை மட்டும் சந்நியாசியாக மாற செய்வது ஏன்? அதுதான் சந்தேகம். வயது வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த பாதையைத் தேர்வு செய்ய முடியும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஆஜராவதால் உங்களுக்கு புரியாது. ஆனால் இந்த நீதிமன்றம் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இல்லை. எங்களுக்கு முன்னால் உள்ள மக்களுக்கு மட்டுமே நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம், என்று கூறினார்.

ஈஷா மையத்தில் உள்ள பெண்கள் இருவரும் இதில் வாதங்களை வைக்க முற்பட்டபோது,​​பெஞ்சில் உள்ள மூத்த நீதிபதி , நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்வதாகக் கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோரைப் புறக்கணிப்பது பாவம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே என்பது பக்தியின் கொள்கை, ஆனால் உங்கள் பெற்றோரின் மீது உங்களுக்குள்ள வெறுப்பை எங்களால் பார்க்க முடிந்தது. நீங்கள் அவர்களை மரியாதையுடன் கூட பேசவில்லை, என்று கடிந்து கொண்டனர். மனுதாரர் வக்கீல் எம். புருஷோத்தமன் இந்த வழக்கில் வைத்த வாதத்தில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் கூட அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் இ.ராஜ் திலக் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று சென்னை உயர் நீதிமன்றம் இதையடுத்து உத்தரவிட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal