‘‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு!’’ என்று அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இன்னும் தீனி போடும் விதமாக, விசிக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் பேசும் பொருளாக, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் விவாதத்தைக் கிளப்பின. கூட்டணிக் கட்சிகள் இணைந்து பெற்ற வெற்றியை தங்களது சுய வெற்றிபோல திமுக பிரசாரம் செய்தது தவறு என்றும், வட மாவட்டங்களில் விசிக கூட்டணி இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
மறுகணமே விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், வன்னியரசு, எம்.எல்.ஏ-க்களான சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட விசிக தலைவர்களே ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதோடு, ஒரு படி மேலே போய் ஆதவ் அர்ஜுனாவை பா.ஜ.க-வைச் சேர்ந்த சங்கிகள்தான் இயக்குகிறார்கள் என விசிகவுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் (2021) ஆதவ் அர்ஜுனாவும், சபரீசனும்தான் என்கிட்ட கூட்டணி குறித்து தனியாக பேசினாங்க. என்ன பேசினாங்கனா, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைச் சொல்லி, அந்த எண்ணிக்கையில் திமுக போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பெறும் அளவுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாதான் நிலையான அரசு இருக்கும். இல்லன்னா, பிற மாநிலங்கள்ல நடக்கிற மாதிரி 10 எம்.எல்.ஏ-க்களை தூக்கிட்டாங்கனா அரசு நிலை இல்லாம போய்டும். அரசுக்கே பெரிய பிரச்சினை வந்திடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு, தயவு செஞ்சு ஒத்துழைப்பு கொடுங்கன்னு ரெண்டு பேரும் என்கிட்ட தனியா வந்து கன்வின்ஸ் பண்ணி பேசினாங்க.
அப்போ, கலைஞரே எங்களுக்கு 12 சீட் கொடுத்து பத்துக்கு ஓக்கே சொன்னாரு. ஆனா, நீங்க ரெண்டு பேரும் அதையும் குறைக்கிறீங்க-ன்னு நான் சொன்னேன். மக்கள் நலக் கூட்டணியில இருந்து வந்தவங்களுக்கெல்லாம் நாலு சீட்டுக்கு மேலே தராதீங்க-ங்கிறது பிரசாந்த் கிஷோரின் யோசனை-ன்னு சபரீசனும், ஆதவ் அர்ஜுனாவும் என்கிட்ட சொன்னாங்க. அதுக்குப் பிறகு, ஆறு சீட் சொல்லி முடிவு பண்ணிட்டோம். ஆறு சீட்டுக்கு நாங்க ஒத்துக்கிட்டதுக்கு காரணம், திமுக ஒரு நிலையான அரசு கொடுக்கட்டும்னுதான். இந்த கவர்ன்மெண்ட் சரி இல்லன்னு சொன்னாங்கன்னா, நாளைக்கு பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் உள்ளே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல அவங்க கால் ஊன்றிட்டாங்கன்னா, சாதிய மதவாத சக்திகள் தலைவிரித்தாடும் கவலை எனக்கு இருக்கு!’’ என்று உண்மையை உடைத்திருக்கிறார் திருமாவளவன்.
இந்த நிலையில்தான், திமுகவில் இருந்தபோது விசிகவுடன் இணக்கமாக இருந்த ஆதவ் அர்ஜுனா, தற்போது பாஜகவினருக்கு ஆதரவாக இருக்கிறார் என்று விசிகவினரே பேசி வருகிறார்கள். விசிக தலைவர்கள் சிலர் ஆதவ் அர்ஜூனாவை பாஜகவுடன் இணைத்துப் பேசியதற்கான காரணம் குறித்து கட்சியின் உள்விவகாரங்களை அறிந்த முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
அவர்கள், ‘‘கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து வெற்றி பெற்றால் மட்டுமே திமுக-வால் நிலையான ஆட்சி கொடுக்க முடியும் என்று ஆதவ் அர்ஜுனாவும், சபரீசனும் கூட்டணிக் கட்சிகளை இணைக்கும் வேலைகளில் முழுமையாக ஈடுபட்டனர். அதில், வெற்றியும் பெற்றார்கள். தொடர்ந்து, திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பிறகு, தலைவர் திருமாவின் செயல்பாடுகள் பிடித்துப் போக ஆதவ் அர்ஜுன் விசிகவுக்கு வருகிறார். அரசியலில் 40 ஆண்டு காலமாக எங்கள் தலைவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உழைப்புக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் அவர் கேள்வி கேட்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் எப்படி சங்கிகள் என்ற வார்த்தை வந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
ஆதவ் அர்ஜூனாவின் கடந்த கால அரசியல் பின்னணியைப் போய்ப் பாருங்கள். அவரே பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் என்பது புரியும். ஆனால், அவரையே சங்கிகள் இயக்குகிறார்கள் என்று சொல்லும் போது, எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அளித்த பேட்டிக்குப் பதில் கொடுக்க முடியாமல் திமுக-வினர் திணறியதோடு, இவ்விவகாரத்தைத் திசை திருப்ப `ஆதவ் அர்ஜுனை சங்கிகள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற விஷமப் பிரசாரத்தைக் கையில் எடுத்தது திமுக தான். அவர்கள் கொடுத்த அஜெண்டாவைத்தான் விசிக எம்.எல்.ஏ-க்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியையும், தலைவரையும் மறந்து பதவிக்காகச் சொந்த கட்சி நிர்வாகிகள் மீது சேற்றை வாரிப் பூசிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கோவமாக ஆதங்கப்பட்டனர் திருமாவின் தம்பிகள்!