தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி துரை தயாநிதிக்கு திடீரென ஸ்ட்ரோக் வந்துவிட்டது. அப்போது அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்த அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். அங்கு 3 மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து பிசியோதெரபி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. அங்கு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. பேச்சு பயிற்சியும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் இருமுறை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார். அது போல் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி குணமடைந்ததால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு பேச்சு பயிற்சி மற்றும் இதர சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் செய்து வருவதாக தகவல்கள் வருகிறது.
நெப்போலியன் தற்போது தனது மகன் திருமணத்திற்காக ஜப்பானுக்கு கப்பலில் சென்றுள்ள நிலையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அமெரிக்காவில் துரை தயாநிதிக்காக சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் கசிகிறது.