‘‘கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’’ என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லியில் 45 நிமிடங்களாக பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
‘‘இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமர் மோடியின் கையில் தான் உள்ளது. 3 முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசு நிதி தராததால் மெட்ரோ பயணிகள் தொய்வு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் .
தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படாததை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
உடனடியாக நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உள்ளேன். மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன்.
இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். வழக்கமாக 15 நிமிடங்கள் தான் நேரம் அளிக்கப்படும். இந்த முறை 45 நிமிடங்கள் பிரதமரிடம் பேசினேன்.
நான் ஒரு முதல்வராக சந்தித்தேன், அவர் ஒரு பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார். துணிச்சலுடன் போராடி இருக்கிறார் செந்தில் பாலாஜி. விரைவில் நிரபராதி என நிரூபிப்பார்’’ இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.