அமைச்சர் பொன்முடிக்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்த பிறகுதான், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரம்மாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வளவு எளிதில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒத்துக்கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அமைச்சர் பதவி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகிறது. அக்டோபர் மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியோடு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியும் மேலும் சில ஜூனியர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவைத்துறை ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது மின்சார துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறையை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் கூடுதலாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்துள்ளதால் அவர் ஏற்கனவே வகித்து வந்த துறைகள் அவருக்கே ஒதுக்கப்படும் என என தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு மற்றும் நிபந்தனைகளை காரணம் காட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அமைச்சர் பொன்முடி பதவி இழந்த நிலையில், மீண்டும் சட்ட போராட்டங்களுக்குப் பிறகே அவர் அமைச்சராக ஆளுநரால் பதவி பிரமானம் செய்து வைக்கப்பட்டார்.இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கும் இதே போல் நிலை ஏற்படலாம் எனவும், சட்ட போராட்டங்களுக்குப் பிறகே அவர் அமைச்சராக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.