உதயநிதி ஸ்டாலின் துனை முதலமைச்சராகும் அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது என தகவல்கள் கசிகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் நேற்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக இந்தாண்டு முதன்முறையாக ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டு, அவ்விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,”உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்” என பேசினார்.
அப்போது மேடையின் கீழ் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட திமுக தொண்டர்களும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் திமுகவினர் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுவரை உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என பல அமைச்சர்கள் தொலைக்காட்சி பேட்டிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலேயே கட்சியின் சீனியரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் காலம் தாழ்த்தாதீர்கள் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது திமுகவினரை உற்சாகம் அடைய வைக்கும் அறிவிப்பு வர இருக்கிறது. இதனால் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே சமயம் இன்று நாள் சரியில்லை, நாளை அல்லது நாளை மறுநாள் துனை முதல்வர் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலும் கசிகிறது.