சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி. கொலை, கொலை முயற்சி, மிரட்டல் என மொத்தம் 59 வழக்குகளில் தொடர்புடையவர்.
சென்னை – அண்ணா சாலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி காக்கா தோப்பு பாலாஜியும் அவரது நெருங்கிய நண்பருமான தென் சென்னை தாதா சிடி மணியும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரவுடி சம்போ செந்தில் தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நூலிழையில் இருவரும் உயிர் தரப்பினர். இந்த சம்பவத்துக்கு பிறகு கைதாகி சிறை சென்ற பாலாஜி, சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஆந்திர எல்லையோர பகுதிகளில் பதுங்கி இருந்து வழக்கம்போல தனது ஆட்கள் மூலம் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தார்.
போலீஸாரின் தொடர் நெருக்கடி காரணமாக சென்னை நகருக்குள் தலை காட்டாமல் இருந்தார். இந்த நிலையில் கொடுங்கையூர் முல்லை நகர் பகுதியில் போலீஸார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீஸார் அந்த காரை விரட்டிச் சென்று வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு அருகே மடக்கினர்.
அப்போதுதான் காரில் இருந்தது காக்கா தோப்பு பாலாஜி எனத் தெரியவந்தது. அவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். போலீஸார் ஒதுங்கிக் கொண்டனர். இதில் ஒரு குண்டு கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் வாகனத்தின் மீதும், மற்றொரு குண்டு அருகில் உள்ள சுவற்றிலும் பாய்ந்தது.
இதையடுத்து கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்பில் குண்டு பாய்ந்து காக்கா தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பள்ளியில் படிக்கும்போதே டீச்சர் கேட்ட கேள்விக்கு உறவினர் துரையைப் போலவே ‘நான் ரவுடியாவேன்’ என்று கூறி ஆசிரியரை அதிர்ச்சியடையவைத்தவர். 9-ம் வகுப்பு வரை படித்த இவர், ஆரம்ப காலத்தில் அடி, தடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்றார். காக்கா தோப்பு பகுதியில் யுவராஜ் மற்றும் இன்பராஜ் ஆகியோர் வைப்பதுதான் எழுதப்படாத சட்டமாக இருந்தது.
அவர்களின் நட்பு பாலாஜிக்கு கிடைத்தது. மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவைக் கொலை செய்ய யுவராஜ், இன்பராஜ், பாலாஜி ஆகியோர் ஸ்கெட்ச் போட்டனர். புஷ்பா கொலைதான் பாலாஜியின் முதல் கொலை என்கின்றனர் போலீஸார். இதையடுத்து காவல் நிலையங்களில் பாலாஜியின் பெயர் பிரபலமாகத் தொடங்கியது. இதனால் யார் பெரியவன் என்ற போட்டி பாலாஜிக்கும் யுவராஜிக்கும் இடையே ஏற்பட்டது. இந்தப் போட்டியில் யுவராஜ் கொலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு பாலாஜியின் பெயரோடு காக்கா தோப்பு அடைமொழியானது. வட சென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கா தோப்பு பாலாஜி திட்டமிட்டார். அதற்குத் தடையாக இருந்தவர்களை அடுத்தடுத்து காக்கா தோப்பு பாலாஜி மற்றும் அவரின் கூட்டாளிகள் கொலை செய்தனர். சில ஆண்டுகள் பிரபல ரவுடி நாகேந்திரனுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். பிறகு அவரிடமிருந்து விலகினார்.
மனைவியின் கண் முன்னால் நடந்த கொலை: யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த பாலுவுக்கும் காக்கா தோப்பு பாலாஜி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு பாலுவின் தம்பியான சதீஷ் கொலை செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு நடந்த கொலையை இன்னமும் பரபரப்பாக காவல்துறையினர் பேசுவதுண்டு.
பில்லா சுரேஷ் என்பவர் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளிகள், பில்லா சுரேஷை அவரது மனைவி கண் எதிரே தலையை வெட்டிக் கொலை செய்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜி (எ) விஜயகுமாரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்த காக்கா தோப்பு பாலாஜி, செம்மரக்கடத்தலிலும் ஈடுபடத் தொடங்கினார். செம்மரக்கடத்தலில் மையப் பகுதியான மாதவரத்தில் செம்மர பிசினஸ் செய்பவர்களுடன் காக்கா தோப்பு பாலாஜிக்கு அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு பாலாஜியின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. அவரின் லைஃப் ஸ்டைலே மாறியது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸார், வழக்குகள் நிலுவையில் உள்ள காவல் நிலைய போலீஸார் என அனைத்து போலீஸாரின் பார்வையும் காக்கா தோப்பு பாலாஜி மீது விழுந்தது. சிறைக்குச் செல்வதும் பிறகு வெளியில் வருவதும் காக்கா தோப்பு பாலாஜிக்கு வழக்கமாகியது. இந்நிலையில் அவரது ரவுடி சகாப்தம் முடிவுக்கு வந்தது என மேற்கோள் காட்டி போலீஸார் தெரிவித்தனர்.