நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று உறுதிபட சசிகுமார் தெரிவித்துள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘நந்தன்’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று (செப்.13) படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
‘நந்தன்’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில், விஜய்யை சந்தித்து கதையை கூறியது, அது நடக்காமல் போனதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார் சசிகுமார். அதில் அவர், “விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு எல்லாம் பெற மாட்டார். அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நானெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
விஜய்யிடம் ஒரு வரலாற்று படத்துக்கான கதையை கூறினேன். அது ரொம்ப பிடித்து, அவரே தயாரிப்பாளர் எல்லாம் சொன்னார். அந்தச் சமயத்தில் படத்தின் செலவு அதிகமாக இருந்ததால் பண்ண முடியாமல் போனது. இப்போது இருக்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எல்லாம் அந்தச் சமயத்தில் இல்லை. இப்போது அது சாத்தியம், அப்போது இல்லை. ‘ஈசன்’ படத்துக்குப் பிறகு அந்தப் படம் நடப்பதாக இருந்தது” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.