மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் மம்தா முதல்வர் பதவிலியிருந்து விலக வேண்டும் என 34 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அவர், 2 மணிநேரம் காத்திருந்த நிலையில், டாக்டர்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து, மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலக தயார், எனக் கூறியிருந்தார்.