2026ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்கிறார் உதயநிதி. முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் ‘மாற்றங்கள்’ இருக்கிறது என்றார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கும்போதே ‘மாற்றத்தை’ ஏற்படுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ள நிலையில் அவர் திரும்பி வந்த பின்னர் திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாட உள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை புரிவோரை, தமிழினத்திற்காக தனது உழைப்பை தொடர்ந்து வழங்கி வருவோரை கௌரவிக்கும் வகையில் திராவிட இயக்க தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரியார் விருதுக்கு பாப்பம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு புதிய விருது நிறுவப்பட்டுள்ளது. நிறுவியதோடு எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கழகம் காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை தலைவர் கலைஞர் அவர்கள் 1985 ஆம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – பேரறிஞர் பெருந்தகை அண்ணா-தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதுகள் கழகக் காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2008 ஆம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018 ஆம் ஆண்டு முதல் இனமானப் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து-இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மாண்புமிகு மு க ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.

இந்த ஆண்டுக்கான ‘மு.க.ஸ்டாலின் விருது’ தஞ்சை திரு. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நாட்கள் இருட்டில் இருந்த பழனிமாணிக்கம் திடீரென மின்னுவது எப்படி என அறிவாலயத்தில் உள்ள உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உதயநிதி இடம் பிடித்திருப்பதுதான் சீனியர்களையே சிந்திக்க வைத்தது. காரணம், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் சிபாரிசு கிடையாது. தகுதியின் அடிப்படையில்தான் ‘சீட்’ என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி.

இந்த நிலையில்தான் தி.மு.க.வில் ஒருசிலரால் ஓரங்கட்டப்பட்டு, அப்பகுதியில் செல்வாக்காக இருப்பவர்களை மீண்டும் லைம் லைட்டிற்குள் கொண்டுவரும் வேலையை உதயநிதி செய்து வருகிறார். டி.ஆர்.பாலுவால் தஞ்சையில் நெருங்காலமாக ஓரங்கட்டப்பட்டவர்தான் பழனிமாணிக்கம். கலைஞர் இருக்கும் போது மத்திய இணையமைச்சராக வலம் வந்த பழனிமாணிக்கம், டெல்டாவில் தனக்கென அரசியல் செல்வாக்¬¬ வைத்திருப்பவர்.

பழனி மாணிக்கம் விஸ்வரூபம் எடுத்தால், தனது மகனின் அரசியல் எதிர்காலம் போய்விடும் என்பதால், சில காய்களை நகர்த்தி டி.ஆர்.பாலு, மாணிக்கத்தை ஓரங்கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில்தான் பழனி மாணிக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான்!

காரணம் இரண்டைச் சொல்கிறார்கள்… ஒன்று டி.ஆர்.பாலுவின் மகன் அமைச்சராக இருக்கிறார். இனி இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உதயநிதி முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள். இன்னொன்று தி.மு.க.வை கடுமையாக எதிர்த்துப் பேசி சிறையில் இருக்கும் நபருடன் தொடர்பில் இருப்பதாக தலைமைக்கு தகவல் சென்றதால் இந்த ‘செக்’ என்கிறார்கள். டெல்லியிலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கும் டி.ஆர்.பாலு டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் எதுவாக இருந்தாலும் மின்னுகிறார் ‘மாணிக்கம்’… மிரண்டு போயிருக்கிறார் பாலு..!’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal