‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்று முன்னோர்கள் அன்றைக்கே சொல்லியிருக்கிறார்கள். ஆம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை இன்றைக்கு இதுதான்!
விவசாயிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைத்தாலும், அங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ‘உங்களது நெல்லை முன்கூட்டியே அளக்க வேண்டுமா..?’ அதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும். அல்லது அந்தப் பகுதி ஆளும்கட்சியின் ஒன்றியச் செயலாளர் நியமித்திருக்கும் புரோக்கரிடம் பணக் கொடுக்க வேண்டும் இதுதான் இன்றைக்கு தமிழகத்தின் நிலைமையாக இருக்கிறது. இந்த நிலையில்தான் கடலூரில் ஒரு விவசாயி மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடபாதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (54). விவசாயியான இவரது வயலில் அறுவடை செய்த நெல்லை வலசக்காடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார்.
நேரடி கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூட்டைக்கு ரூ.55 கமிஷன் தருமாறு கேட்டுள்ளனர். சந்தோஷ்குமார் கமிஷன் தர மறுத்துள்ளார். இதனால், அவரது நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
மனஉளைச்சலுக்கு ஆளான சந்தோஷ்குமார், கடந்த 6-ம் தேதி மாலை, வயலுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்துக்கு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், இதுகுறித்து கடலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தங்க பிரபாகரனிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
அதன்படி மண்டல மேலாளர் விசாரணை நடத்தி, வலசக்காடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பருவகால பட்டியல் எழுத்தர் பி.பாலகுமாரன், உதவியாளர் சி.முத்துக்குமரன், காவலர் எ.ரமேஷ்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று பணி நீக்கம் செய்தார்.
இதற்கிடையே விவசாயி சந்தோஷ்குமாரின் நெல் மூட்டைகள் அனைத்தும் வலக்காடு நேரடிநெல்கொள்முதல் நிலையத்தில் நேற்று முன்தினமே கொள்முதல் செய்யப்பட்டதாக, அந்த நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அமைத்திருக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்ன நடக்கிறது என விவசாயிகளிடம் பேசினோம். ‘‘சார், ஒரு விவசாயி மருந்து குடித்த பிறகுதான் இந்த விஷயமே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான். ஆறு மாதம் இரவு பகலாக நீர் பாய்ச்சி கஷ்டப்படுகிறோம். தனியார் அரவை மில்களில் நெல் மூட்டைகளை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள் என்பதால்தான் அரசு கொள்முதல் நிலையங்களை நாடிச் செல்கிறோம்.
ஆனால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை முகவராக நியமித்துவிடுகிறார். அவரை கவனித்தால் மட்டுமே நெல்லை உடனடியாக எடுத்துக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால் தினந்தோறும் நெல்லை போய் நாங்கள் பார்த்து உலர வைக்கவேண்டிய நிலை இருக்கிறது. தவிர, அங்கு நெல் அளப்பவர்களுக்கு ‘சரக்கு’ வாங்கிக்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அது வாங்கிக்கொடுத்தால் உடனடியாக நெல்லை அளக்கிறார்கள். இந்த விஷயம் எல்லாம் அங்குள்ள ஆளும் கட்சி புள்ளிகளுக்கு தெரியாமல் இல்லை.
இதனை யாரும் எதிர்த்துக் கேட்க மாட்டார்கள். காரணம், அடுத்த முறை அங்கு நெல்லை கொண்டுபோய் சேர்த்தால் பலவிதமான காரணங்களைச் சொல்லி தாமதமாக எங்களது நெல்லை எடுத்துக்கொள்வார்கள். திருச்சி புறநகர் பகுதிகளான துறையூர்,உப்பிலியபுரம் போன்ற இடங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த பகுதிகளுக்கு அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை. அப்படியே கண்காணித்தாலும் ஆளுங்கட்சியின் ஒ.செ.க்கள் உத்தரவை மீறி செயல்பட முடிவதில்லை.
விவசாயிகளில் வயிற்றில் அடித்து சம்பாதித்தால் என்னவாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்’’ என்றனர் ஆதங்கத்தோடு!