முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும், திமுகவில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான, அமைச்சர்கள் கே. என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களையும் அறிந்தார். பவள விழாவையொட்டி வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கட்சிக் கொடிகளை ஏற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அமெரிக்க பயணத்தில் கையெழுத்தான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்ட அவர், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றியும் தெரிந்திருப்பதாகவும், சிகாகோவில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது, முதலமைச்சர் தமிழகம் திரும்பியதும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

குறிப்பாக, இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal