வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைமையில் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில், வடக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:

‘‘தி.மு.க., எப்போதுமே ஒரு இலக்கு வைத்து தான் தேர்தலில் போட்டியிடும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கும் முன் கூட்டியே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி இலக்கு நிர்ணயித்து போட்டியிட்டுத்தான், 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. இவ்வளவு வெற்றி பெற்ற பின்னும், மத்திய இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது, துரதிருஷ்டம் தான்.

இப்போதைக்கு, 2026 சட்டசபை தேர்தலை நோக்கி நகர்கிறோம். அனைத்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 200ல் வெற்றி பெறுவோம். தி.மு.க., தன் தொண்டர்களை நம்பியுள்ள இயக்கம்; தலைவர்களை நம்பியிருக்கும் இயக்கமல்ல. தி.மு.க., பெறும் வெற்றி அனைத்துக்கும் தொண்டர்கள் உழைப்பே காரணம்’’இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க.வினரின் இந்த ‘லட்சியம்… நிச்சயம்..!’ குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் புதிய கட்சிகள் உதயமாகிறது. பி.ஜே.பி.யும் வளர்ந்து வருகிறது. ஆனால், ஜெயலலிதா இருக்கும் போது 42 சதவீத வாக்கு வங்கியுடன் இருந்த அ.தி.மு.க. இன்றைக்கு தொடர் தோல்விகளை சந்திக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஒன்றிணைத்து, பலமான கூட்டணி அமைத்தால் தி.மு.க.வின் லட்சியம், நிச்சயமாக எடுபடாது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி ‘இணைப்பை விரும்பமாட்டார்’! எனவே, எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. இருக்கும் வரை, அமைச்சர்கள் சொல்லும் லட்சியம் நிச்சயம் நிறைவேறும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal