பொதுவாகவே திரைப்படத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் எழுந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில்தான், மலையாள திரையுலகில் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஹேமா கமிட்டியின் அறிக்கையை முழுமையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள திரையுலகில் பாலியல் புகார்கள் தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கை நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள சில பகுதியை நீக்கியே கேரள அரசு வெளியிட்டது. முக்கிய புள்ளிகளை காப்பாற்றவே சில பகுதிகளை அரசு நீக்கியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அறிக்கையில் உள்ள குற்றசாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது .ஆனால் அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய கேரள அரசு தற்போது முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 9ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பே முழு அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரம்.இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஜூனியர் நடிகை அளித்த புகாரின்படி மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு தனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக அடிமலையில் உள்ள ரெசார்ட் மற்றும் அவரது வீட்டில் வைத்து பாபு ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை புகார் அளித்திருந்தார். அதன் படி அந்திமாலை போலீசார் பாபு ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை பூதாகரமானதை அடுத்து மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அது பொறுப்பற்ற செயல் என சத்தம் போடாதே, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பத்ம பிரியா சாடியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை என்று கடுமையாக தெரிவித்துள்ள அவர் மலையாள திரை நடிகர்கள் மத்தியில் அதிகார குழுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.