கேரளாவில் நடிகைகளுக்கான கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறி இருந்தார். இது குறித்து, நடிகர் மோகன்லால் தன்னை செல்போனில் அழைத்து விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “4 நாட்களுக்கு முன் கேரள சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து பேசினார்கள். நீங்கள் சொன்னது உண்மைதானா? என்று கேட்டார்கள். ஆமாம் என்றேன். இதுகுறித்து நான் புகார் கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவில் இப்போது பாலியல் தொல்லை இல்லை. 1980-களில் நடிகைகளுக்குப் பல துன்புறுத்தல்கள் இருந்தன. எங்கோ ஒரு இடத்தில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது.
அரசியலுக்கு வர ஆசைப்படும் நடிகர்கள் முதலில் மவுனத்தைக் கலைத்து குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒரு கதை இருக்கிறது. முன்னணி நடிகர்கள், நடிகைகளின் மவுனம் தவறாகப் போய்விடும். நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பாக இருப்பேன் என்று ஆதரவாகச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.