தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் ‘பார்முலா – 4’ கார் பந்தயம் நடந்து வரும் நிலையில், அதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகன், நேற்று பகல் 11:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். சொந்த பயணம் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால், பொதுத்துறை செயலர் வாயிலாக, முதல்வரின் ஒப்புதலை பெற வேண்டும்.வெளிநாட்டில் அரசு தொடர்பான ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்.
முதல்வர் அமெரிக்காவில் உள்ள நிலையில், அரசு மற்றும் கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டிய மூத்த அமைச்சர், சொந்த பயணம் காரணமாக சிங்கப்பூர் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, துரைமுருகன் தரப்பினரோ, ‘‘அமைச்சர் துரைமுருகனுக்கு இதயம் தொடர்பான பிரச்னை உள்ளது. அதனால், தன் நண்பரும், மருத்துவருமான சிங்கப்பூரில் இருக்கும் ஜெயராமனை சந்தித்து, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற திட்டமிட்டார். அதற்காக, கடந்த ஆகஸ்ட் 19ல் அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தார் ஜெயராமன். ஆனால், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால், துரைமுருகனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சிங்கப்பூருக்கு செல்ல முடியவில்லை.
இது தொடர்பாக, முதல்வர் அமெரிக்கா புறப்படும் முன், செப்டம்பர் 1ல் சிங்கப்பூர் செல்லவிருப்பதை துரைமுருகன் சொல்லியிருக்கிறார். உடனே அனுமதி அளித்து விட்டார் முதல்வர். அதையடுத்தே துரைமுருகன் சிங்கப்பூருக்கு சென்றார்’’ என்றனர்.
‘சிங்கப்பூரில் கலைஞர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்காக தி.மு.க., துணை பொதுசெயலர் கனிமொழி சிங்கப்பூர் சென்றிருக்கும் நிலையில், துரைமுருகன் சிங்கப்பூர் சென்றிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.