திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருது ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பெரியார் விருது பாப்பம்மாள், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.902 கோடி அபராதமும், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal