உழைப்பு, திறமை, தன்னம்பிக்கையால் இந்திய வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தமிழ் மன்றங்கள் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய இந்த வம்சாவளியினர் வலியுறுத்த வேண்டும். உழைப்பு, திறமை, தன்னம்பிக்கையால் இந்திய வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர். பல்வேறு மொழி பேசி இந்திய மக்கள் அமெரிக்காவில் பரந்து விரிந்துள்ளனர். தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும் என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களை பார்க்கவும் வந்திருக்கிறேன்.
இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய வலியுறுத்துங்கள். ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிகவும் முக்கியமான நாடுகள் ஆகும். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா உள்ளது என்றால் இந்திய 5 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான நட்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் நல்லுறவு தொடர்கிறது.
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலகின் நலனுக்கு இந்தியா அமெரிக்கா இடையே உறவு முக்கியம். அமெரிக்காவுக்கு அதிக அளவில் குடி பெயர்ந்த மக்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் இந்திய மாணவர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
தமிழகம் என்பது அமெரிக்காவின் ஈர்ப்புக்குரியதாக உள்ளது. புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றன. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் திகழ்கிறது.வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்’’இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் தொழிற்சாலை அமைக்க ஓமியம் நிறுவனத்துடன் சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால், எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.