காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் வீட்டுக்கு மருமகள் ஆகிறார் நடிகை மேகா ஆகாஷ். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும், நடிகை மேகா ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பல முன்னணி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனராம்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த மேகா ஆகாஷ் கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் மேகா ஆகாஷ். தனது காதல் கணவராகப் போகும் நபரின் பெயர் சாய் விஷ்ணு என குறிப்பிட்டு அவரையும் அறிமுகப்படுத்தி இருந்தார் மேகா ஆகாஷ். மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேகா ஆகாஷின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு யார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவரின் வாரிசு என்பதுதான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய செய்தி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவராகவும், மத்திய, மாநில அமைச்சராகப் பொறுப்புகளை வகித்துள்ளவருமான காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணு. திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணு, சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குநர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மேகா ஆகாஷுக்கு சாய் விஷ்ணுவை 9 வருடங்களாகத் தெரியுமாம். கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் தான் பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் மண வாழ்வில் இணைய இருக்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal