ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் கன்னட சினிமா நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையிலிருந்து அவர் வீடியோ காலில் பேசியுள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றைய தினம் (ஆகஸ்ட் 25) சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அவருடன் மூன்று பேர் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அது பலருக்கும் அதிர்ச்சி தந்த சூழலில் தற்போது வீடியோ காலில் தர்ஷன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் தர்ஷன் வெளிச்சமான ஒரு அறையில் அமர்ந்துள்ளார். அந்த வீடியோவில் புன்னகை பொங்க தர்ஷன் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசியவர் உணவு சாப்பிட்டீர்களா என கேட்க, தர்ஷனும் தலையை ஆட்டி சாப்பிட்டதாக சொல்கிறார். இது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal