‘அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கும் தகுதி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே உண்டு என அக்கட்சி தொண்டர்களே கூறி வருகின்றனர்’’ என, பா.ஜ.க, விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

தேனியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ‘‘மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் குறித்து திட்ட அறிக்கை சரியாக வழங்காததால் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது.

தி.மு.க., அரசு ஊழல் நிறைந்தது. அமைச்சராக இருந்தவர் சிறையில் உள்ளார். பலரின் மீது வழக்கு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக் கூட்டத்தில் கூட முதல்வர் பங்கேற்கவில்லை. கேள்வி கேட்டால் ‘குண்டாஸ்’ என்ற நிலை உள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., சார்பில் யாத்திரை நடத்த உள்ளோம். அதுகுறித்த அறிவிப்பை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிடுவார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு இருந்த மவுசு குறைந்து விட்டது. தமிழக மக்கள் பா.ஜ.,விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கி உள்ளனர்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலினிடம் பேசியது அரசியல் நாகரிகம். துரோகத்தின் மறு பெயர் பழனிசாமி. அவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி ஆட்சி அமைக்கும். தி.மு.க.,வை எதிர்க்கும் சக்தி பா.ஜ.க,விற்கு மட்டுமே உள்ளது’’ இவ்வாறு அமர்பிரசாத் ரெட்டி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal