கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடையில் டீ குடித்த திமுக எம்பி கனிமொழி அங்கிருந்த உண்டியலை பார்த்ததும் கையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணாமல் உள்ளே செலுத்தினார். நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் என்பது இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் தங்கை கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக எம்பியாக மீண்டும் தேர்வாகி உள்ளார். தற்போது அவர் தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் நேற்று கனிமொழி எம்பி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் கனிமொழி எம்பி பங்கேற்று பேசினார். மேலும் பள்ளியில் நன்கு படித்த மற்றும் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கினார்.

அதன்பிறகு அவர் இரவில் தக்கலையில் உள்ள டீக்கடையில் டீக்குடிக்க சென்றார். அப்போது கனிமொழி எம்பியுடன் பால்வளத்துறை அமைச்சரும், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். கனிமொழி சென்ற டீக்கடையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விஷ்ணு ‘நரக மாளிகை’ என்ற புத்தகத்தை கனிமொழி எம்பிக்கு வழங்கினார்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தக்கலை வட்டார செயலாளர் ஜாஸ்மின் மண்டைகாட்டம்மன் வரலாறு என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். அப்போது டீக்கடையின் முன்பு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயன்ற பணத்தை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்ததும் கனிமொழி எம்பி கையில் இருந்த பணத்தை எண்ணாமல் அப்படியே சுருட்டி வயநாடு நிலச்சரிவுக்கு உதவிக்கரம் வழங்க வைக்கப்பட்ட உண்டியல் உள்ளே செலுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு தரப்பினர் கேரளா அரசுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த டீக்கடை என்பது வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. டீக்கடையில், ‘‘டீ குடிக்கலாம் – பலகாரம் சாப்பிடலாம்.. நீங்கள் தரும் பணம் வயநாட்டிற்கு’’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal