கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழை பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இன்றைக்கு மறைந்த கலைஞரின் புகழை உயர்த்திப் பிடித்துப் பேசியிருப்பதுதான் பலரை உற்று நோக்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பாஜகவிற்கு எதிராக தீவிர அரசியலை கடைபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு போட்டியாக திமுக திகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக திமுக பாஜக பக்கம் நெருங்கி வரும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திமுகவை பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் விமர்சனம் செய்வதை குறைத்துள்ளனர். அதே நேரத்தில் திமுக கூட்டணி கட்சி புறக்கணித்த ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போன் போட்ட ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நாயணம் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அண்ணாமலையும் திமுக அமைச்சர்களோடு நெருக்கம் காட்டி வருகிறார். இந்தநிலையில் தான் இன்று மாலை கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நாயணம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் மறைந்த கருணாநிதியை புகழ்ந்து பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு அரசியல் தலைவராக சிறந்து விளங்கியவர், சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்தார். மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி என பெருமைப்படுத்தியுள்ளார்.
கருணாநிதியால் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் அவருக்கு பெற்றுத் தந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம்¢ பேசினோம். ‘‘சார், கடந்த ஒரு மாதமாகவே தமிழக அரசியல் களம் மாறி வருகிறது. அத்திக் கடவு & அவிநாசி திட்டத்திற்கு போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை திடீரென்று வாபஸ் வாங்கியிருக்கிறார். தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதன் முறை.
அதே போல், கலைஞரின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டிற்கு, ‘முதல்வர் என்னை நேரடியாக அழைத்ததால் நான் பங்கேற்கிறேன்’ என ஓபனாக பேசினார். கவர்னரின் தேநீர் விருந்திற்கு கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது. கடந்த முறை தி.மு.க.வும் புறக்கணித்தது. ஆனால், இந்த முறை திடீரென்று முதல்வர், உதயநிதி உள்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இது கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியயை வைத்தது.
இன்னும் ஒரு படி மேலே போய், தமிழக அமைச்சர்களிடம் அண்ணாமலை நலம் விசாரித்து பேசினார். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அண்ணாமலையிடம் ‘உரிமையோடு, கையைப் பிடித்தவாரே ஐந்து நிமிடம் பேசினார். இதுதான் திமுகவினரையே உற்று நோக்க வைத்தது. இந்த நிலையில்தான் பிரமர் மோடி கலைஞர் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
பிரதமர் மோடியும், 13, 15 எம்.பி.க்களுக்காக பீகாரையும், ஆந்திராவையும் அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கிறது. லட்டு மாதிரி 20க்கு மேல் வைத்திருக்கும் தி.மு.க. நம்முடன் இருந்தால் என்ன? என யோசித்துதான் தனது ‘பரமபத’ விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே, கலைஞரின் நாணய வெளியீட்டிற்கு ராகுல்காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதோடு, இந்த நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார். எனவே, தமிழகத்தில் மோடியின் ‘பரமபத விளையாட்டு’ ஆரம்பமாகிவிட்டது’’ என்றனர்.