சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினர் தேநீர் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,’சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது. பதவிக்காலம் முடிந்தும் ஆர்.என்.ரவி கவர்னராக தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. தமிழக மக்கள் நலனுக்கும், அரசுக்கும் எதிராகவே கவர்னர் செயல்பாடுகள் இருக்கின்றன” என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறுகையில், ‘தமிழக மக்களின் நலனுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதால், சுதந்திர தினத்தையொட்டி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்’ என்றார். காரணம் வேறு வேறு சொன்னாலும், ஆளும் கட்சிக்கு ஐஸ் வைக்கவே இப்படி காரணங்களை கண்டுபிடித்து, கவர்னர் விருந்தை புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal