ஆகஸ்ட் 16ம் தேதி அ.தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்களுக்கு ‘ஸ்ட்ரிக்’கான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறாராம்.
அ.தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டத்தை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் செயற்குழுவை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அணிச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அதிமுகவின் செயற்குழு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், கட்சியின் மா.செ.க்களுக்கு இன்று ஒரு உத்தரவை ஓரலாக பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி. அதாவது, மா.செ.க்களை தொடர்பு கொண்டு, ‘‘எந்த சூழலிலும் ஓபிஎஸ், தினகரன் இணைப்பு பத்தியோ, ஒன்றிணைய வேண்டும் என்பது பற்றியோ பேச்சை எடுக்கக்கூடாது’’என அட்வைஸ் செய்திருக்கிறாராம் எடப்பாடி. அவரவர் மாவட்டத்தில் உள்ள செயற்குழு உறுப்பினர்களிடம் ஸ்ட்ரிக்டாக அறிவுறுத்துங்கள் என சொல்லியுள்ளார்.
இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘கழக கட்டுப்பாட்டை மீறாத வகையில் நாங்கள் நடந்து கொள்ளலாம். ஆனா, தொண்டர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமே? என்று சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள் மா.செ.க்கள் பலரும். அ.தி.மு.க.வில் இருக்கும் சசிகலா, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ‘ஒற்றுமையைப்’ பற்றி பேச இருக்கிறார்களாம். இதற்கு சில சீனியர்களே மறைமுகமாக ஆதரவு கொடுப்பதால் அ.தி.மு.க. செயற்குழுவில் இது பற்றிய விவாதம் எழுந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தெளிவாக இருக்கிறார்.
அதாவது, மாவட்டத்தில் தங்களின் ஆதரவாளர்களாக இருக்கும் செயற்குழு உறுப்பினர்களிடம் க்ளாஸ் எடுத்து வருகின்றனர். அதாவது, செயற்குழு கூட்டத்தில் ஒன்றிணைவது பற்றி பேச்சை ஆரம்பியுங்கள் என தங்களின் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். எடப்பாடிக்கு இந்த தெரிந்துள்ளது. இதனை அவர் ரசிக்கவில்லை. அதனால், அப்படி ஒரு விவாதம் செயற்குழுவில் எழக்கூடாது என்பதற்காகத்தான் மா.செ.க்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் எடப்பாடி.
ஆனால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டுமானால் கட்சி வலிமையாக வேண்டும் என தீர்க்கமாக இருக்கும் தொண்டர்கள், எடப்பாடியின் இந்த அட்வைஸ்களை ஏற்பார்களா எனத் தெரியவில்லை. மொத்தத்தில், செயற்குழுவில் நிறைய விவாதங்கள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அதுமாதிரி எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
வருடத்துக்கு ஒருமுறை செயற்குழு கூட்டப்பட வேண்டும்ங்கிறது தேர்தல் ஆணைய விதி. அதனால், மா.செ.க்கள் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும் ? செயற்குழு கூட்டமாகவே நடத்திடலாமே என சொல்லப்பட்டதால் தான் செயற்குழுவைக் கூட்டுகிறார் எடப்பாடி. கூட்டத்தில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் நடமாட்டம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், விலைவாசி உயர்வு, பல்வேறு கட்டண உயர்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளை மையமாக வைத்து திமுக அரசுக்கு எதிரான கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மேலும், தேர்தல் பணிகளை திமுக அரசு முன்னெடுத்து வருவதால் அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மற்றபடி வழக்கமான செயற்குழு தான்’’ என முடித்தனர்.