அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனையடுத்து தான் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும். தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal