‘‘உணர்வுபூர்வமான விளையாட்டுத் துறையை,வியாபார துறையாக மாற்ற வேண்டாம்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ,இந்தியன் ரேஸிங் லீக் என்ற அமைப்புடன் சேர்ந்து சென்னையில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை, சென்னையில் கடந்த டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகள் பல கோடி ரூபாய் செலவில் மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்த போட்டியில் சர்வதேச அளவிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக விளையாட்டு துறை வளர்ச்சிக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என கொண்டாடி வருவது வேடிக்கையாகவும் வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது.
உண்மையில் தமிழக விளையாட்டு துறையை மேம்படுத்த தமிழக முழுதும் உள்ள கிராமப்புற, ஏழை நடுத்தர மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு விளையாட்டுகளில் கனவுகளுடன் லட்சியத்துடன் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கும், ஆசிய காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கான சூழ்நிலை உருவாக்குவதற்கும் எந்தவித முயற்சிகளும் தமிழக அரசால், தமிழக விளையாட்டு துறை அமைச்சகத்தால் எடுக்கப்படவில்லை என்பதுதான் தமிழக விளையாட்டு வீரர்களுக்கும் ஆர்வலர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தமிழக விளையாட்டுத்துறையின் மேல் நம்பிக்கை சிதைந்து வருகிறது.
ஆனால் இதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் ஃபார்முலா கார் ரேஸ் 4 நிகழ்ச்சியை மட்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தூக்கிச் சுமப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.பெருமைக்கு எருமையை மேய்ப்பதால் என்ன பயன்? என்ன பெருமை ? என்ற கிராமத்து பழமொழிக்கு இலக்கணமாக,வசதி படைத்த கோடீஸ்வரர்களின் விபரீத விளையாட்டான தமிழகத்திற்கு தற்போதைய சூழ்நிலைக்கு அவசியம் இல்லாத,ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக சென்னை மக்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சகோதரர் உதயநிதி அவர்கள் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதித்த போது எந்த ஒரு வேகமான செயல்திட்ட நடவடிக்கைகள் இறங்காத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி போர்க்கால அடிப்படையில் தனியார் நடத்தும் ஃபார்முலா 4 கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நியாயமா?
வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னை அண்ணா சாலையில் நடக்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்ச்சிக்கு விடியா திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரு சிறு, குறு தொழில் நிறுவனங்களை மிரட்டி ஸ்பான்சர்ஷிப் பெற்று வருவதாக ஆதாரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆதாரங்களுடன் கூறிய குற்றச்சாட்டுக்கு, ஊழல் விளையாட்டாக மாறி வருவது குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு, ஏன் இதுவரை தமிழக அரசு சார்பிலோ, அமைச்சர் உதயநிதி அவர்களோ ஏன் பதில் அளிக்கவில்லை?
பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த ஹைகோர்ட் அனுமதி அளித்துவிட்டது என்று கூறி ஏற்கனவே சொன்னபடியே, சென்னையின் மையப்பகுதியில் ஃபார்முலா 4 ரேஸ் கார் பந்தய ஏற்பாடுகள் புயல் வேகத்தில் அனைத்து அரசு துறைகளின் முழு ஒத்துழைப்புடன் உங்கள் மேற்பார்வையில் புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடக்க உள்ள இந்த கார் பத்தையும் கூ தீவுத்திடலில் தொடங்கி அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையை கடக்கும் போது மட்டும் ஒலி கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும். இதற்கு மருத்துவமனை சார்பிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் இந்த நிகழ்ச்சி குறித்து ஆபத்தான பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அழுத்தத்தால் தடை இல்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மிக முக்கியமாக பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த ஹைகோர்ட் அனுமதி அளித்திருந்த நிலையில், அந்த நிபந்தனைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் இல்லை. கார் ரேஸ் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையின் போது கார் ரேஸ் நடத்தும் நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் உள்ள பரிவர்த்தனை குறித்து மட்டும் நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கார் ரேஸ் நடத்தப்பட்டால் மக்கள் பல அவதிகளையும் சாலைகள் மூடப்படுவதையும், தேவைப்படும் பாதுகாப்பு அம்சங்களையும், மக்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடிய பல குறைபாடுகளையும் குறித்து முழுமையாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதங்களை முன் வைக்காமல் நீதிமன்றத்திற்கு சரியான தகவலை அளிக்காமல் எப்படியாவது கார் ரேஸ் நடக்க வேண்டும் என்று குறிக்கோளிலேயே இருந்துள்ளதாக தெரிகிறது .
மிக முக்கியமாக பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த ஹைகோர்ட் அனுமதி அளித்திருந்த நிலையில், அந்த நிபந்தனைகள் உறுதியாக கடைப்பிடிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து, திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. உச்ச நீதிமன்றமும் மக்கள் உபயோகபடுத்தும் சாலைகளை இது போன்ற நிகழ்சிகளுக்காக மூட கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது
எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழக அரசும் மக்கள் நலனுக்கு எதிராக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. குறிப்பாக வடசென்னையில் வாழ்ந்து வரும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆர்பிஐ சுரங்க நடைபாதை, முத்துசாமி பாலம், சென்ட்ரல் மேம்பாலம், பல்லவன் சாலை ஆகியவை இந்த நிகழ்ச்சியின் போதும், அதற்கு முன்கூட்டியும் மூடப்படும் போது மக்கள் பெருமளவுக்கு அவதிப்படுவார்கள்.
மிக முக்கியமாக சென்ட்ரல் ரயில்வே நிலையம், அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை ஆகிய செல்லும் வழிகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே தமிழகத்திற்கும் சென்னை மாநகரத்திற்கும் எந்தவித பலனும் இல்லாத தனியார் நடத்தும் ஆடம்பர கார் ரேஸ் நிகழ்ச்சிக்காக வடசென்னையின் பெரும்பாலான மக்கள் சிரமப்படும் போது, தமிழக அரசும் சென்னை காவல்துறையும் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி அனுமதி வழங்கியதும், உயர்நீதிமன்றத்தில் உண்மை சூழ்நிலை தெரிவிக்காததும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.இந்த பந்தயமானது, சென்னை மாநகர மக்களின் மிகுந்த எதிர்ப்பையும், அதேசமயம் பல்வேறுகட்சிககள், சமூகநல அமைப்புகளின் அதிருப்தியையும் பெற்று வருகிறது.
தமிழக அரசாங்கத்தின் கொள்கை முடிவில் தலையிட சாதாரண குடிமகன் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற மமதையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நிகழ்ச்சியில் நடந்து வரும் சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் மக்கள் நலனுக்கு எதிரான விஷயங்களை , நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை புறந்தள்ளும் திமுக ஆட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் தமிழக அரசும், தமிழக விளையாட்டு துறையும் மக்களின் எதிர்ப்பான மனநிலையை புரிந்துகொண்டு, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் உணர்ந்து, உணர்வுபூர்வமான விளையாட்டு துறையை வியாபார துறையாக மாற்றாமல், ஃபார்முலா 4 கார் ரேஸ் நிகழ்ச்சி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.