‘‘அரசுக்கு எதிராக, அரசியல் எதிரிகள் திட்டமிட்டு பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள், ஈசல் பூச்சிகளை போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது….

‘‘கருணாநிதி வழியில், தி.மு.க., அரசு மக்கள் நலன் காக்கும் ஆட்சியை வழங்கி வருகிறது. அந்த நல்லாட்சிக்கு சான்றாக, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர்.

பார்லிமென்டில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தி, தமிழக உரிமைகளை நிலைநாட்டும் குரல்களாக அவை ஒலிக்கின்றன.

கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட அரசியல், நிர்வாக திறனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி, நல்லாட்சியை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பேராதரவை பெற்றுள்ள அரசுக்கு எதிராக, அரசியல் எதிரிகள் திட்டமிட்டு பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள், ஈசல் பூச்சிகளை போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன.

கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், வரும் 7ம்தேதி அவரது 6வது நினைவு நாளில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகில் இருந்து, கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை, என் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளது.

இந்த அமைதி பேரணியில் அணி திரள்வோம். கருணாநிதி நம் உள்ளத்திற்கு தரும் உத்வேகத்துடன், நம் லட்சிய பணத்தை தொடர்வோம்; மக்கள் பணியாற்றி தொடர் வெற்றிகளை குவிப்போம்’’இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal