தி.மு.க.வின் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கும் ‘முக்கிய பணி’தான் தி.மு.க.வினருக்கே வியப்பையும், அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சட்டப்பேரவை தொகுதிகளில் 221-ல் திமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. எனவே, வரும் 2026 தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி விரைவில் வழங்கப்படும் என்று பரவலாக பேச்சு உள்ள நிலையில், தற்போது அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகள் யாரும் போட்டியிட முன்வரவில்லை. மாறாக, அ.தி.மு.க. சார்பில் பல இடங்களில் ‘வீக்’கான வேட்பாளர்களையே களத்தில் இறக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, வரவிருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே பாணியை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கப் போவதாக மருது அழகுராஜ குற்றஞ்சாட்டியிருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘ஒருங்கிணைப்பு…

தனக்கு ஒரு பலவீனமான போட்டியாளராக எடப்பாடியை எப்படி ஸ்டாலின் தேர்வு செய்து வைத்திருக்கிறாரோ அதே போல…

2026-சட்டமன்ற தேர்தலில் அவரவர்களுக்கு ஏற்றவகையில் தாங்கள் எளிதில் வெற்றி பெறுவதற்கு ஏதுவான வீக் கேன்டிடேட்டுகளை மாவட்டச் செயலாள ர்களும் அமைச்சர்களும் தேர்வு செய்து கொள்ள வேண்டும் எனவும்…

அப்படி நாம் டிக் அடிப்பவர்கள் மட்டுமே அவர்களது கட்சியில் சீட்டை வாங்கிக் கொண்டு வருவதற்கான வழிகளை நாமே உருவாக்கித் தரவேண்டும் என்றும் திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் இருந்து முதற்கட்ட அறிவுறுத்தல் கொடுக்கப் பட்டுள்ளதாம்.

சபாஷ்
தகலி இதுக்கு பேரு தான்
கச்சிதமான
கட்சிகளுடான ஒருங்கிணைப்பு..
என்ன நாஞ் சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.

அதாவது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலைப் போல் அதிமுகவில் ‘வீக்’கான வேட்பாளர்களை களத்தில் இறக்க தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவிற்கு முதல்வர் உத்தரவிட்டிருப்பதன் பின்னணியில் ‘கொடநாடு விவகாரம்’தான் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் நன்கு விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal