சமீபத்தில்தான் திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியாக உள்ள மேயர் பதவிகளை நிரப்ப, மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்தனர்.
அவ்வாறு தேர்வான, கோவை மேயர் கல்பனா, திருநெல்வேலி மேயர் சரவணன் ஆகியோர், உட்கட்சி பிரச்னையில் சிக்கினர்.
கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கட்சி தலைமை அறிவுறுத்தல்படி தங்கள் பதவிகளை, இம்மாதம் 3ம் தேதி ராஜினாமா செய்தனர். இதை மாநகராட்சி கமிஷனர்கள் ஏற்றனர். இவ்விரு பதவிகளும் தற்போது காலியாக உள்ளன.
எனவே, திருநெல்வேலி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை ஆகஸ்ட் 5ம் தேதியும், கோவை மேயர் தேர்தலை 6ம் தேதியும் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். அதேநாளில், காலியாகவுள்ள பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு, மறைமுக தேர்தலை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.