தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், புது ரத்தம் பாய்ச்சும் வகையில் பழைய நிர்வாகிகளை கூண்டோடு கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்!
கடந்த 23ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் புதிய பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதன் படி கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன், பொருளாளர் முன்னாள் எம்.எல்.ஏ. இராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
துணைத்தலைவர்களாக முன்னாள் எம்.பி.க்கள், வெங்கடேசன், உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், ரங்கராஜன், ஜெயச்சந்திரன் உள்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
த.மா.க.வின் பொதுச் செயலாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், ராஜகோபால் மற்றும் ஜவஹர் பாபு உள்பட ஈரோடு யுவராஜாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்றைய தினம் யுவராஜா தனது இளைஞரணி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் அ.தி.மு.க.விற்கு போகப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால், அவருக்கு த.மா.கா.வில் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பொதுச் செயலாளர்களாக மொத்தம் 12 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதே போல் அமைப்புச் செயலாளர்களாக ‘லீக்’ மோகன், வெங்கடேஷ், காந்தி, சந்திரன் உள்பட 12 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செயலாளர்களாக பைரவ மூர்த்தி, ஒத்தக்கடை ஜெயப் பிரகாஷ், ராஜா, ஜெயக்குமார் உள்பட 16 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கொள்கை பரப்புச் செயலாளர்களாக வடுவூர் கரிகாலன், ரமேஷ், கல்யாணி, ஆர்.ஜெயமூர்த்தி உள்பட 15 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக ஜி.சந்திரசேகர மூப்பனார், லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ்., சுரேஷ் மூப்பனார், அ.பிச்சை, சந்திரசேகர், எஸ்.சுதாகர் மூப்பனார், என்.ஆர். நடராஜன், ராஜேஸ்வரன், மணலி டாக்டர் சீனிவாசன், பி.எல்.ஏ.சிதம்பரம், சுகுமார் மூப்பனார், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் என முக்கிய நிர்வாகிகளாக 31 பேர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இணைச் செயலாளர்களாக புளியம்பட்டி சக்திவேல், பிரேம்குமார், ஜெயஸ்ரீ சீமான் உள்பட 30 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செயற்குழு உறுப்பினர்களாக மூர்த்தி, மணியன், ஆறுமுகம், சிந்தாமணி அம்மாள், சோலைமலை, செழியன் உள்பட 104 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆலோசனை உயர்மட்டக் குழு உறுப்பினர்களாக என்.எஸ்.வி.சித்தன், கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் உயர்மட்டக் குழு உறுப்பினர்களாக ஓ.ஆர்.ராமச்சந்திரன் உள்பட 10 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் எம்.பி., நட்ராயன், சேதுபதி உள்பட 10 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ., தண்டபாணி உள்பட 10 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
துணை அமைப்புகளான இளைஞரண, மாணவர் அணி, சிறுபான்மையினர் அணி, எஸ்.சி., எஸ்.டி.அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி என சில அணிகளை நீக்கிவிட்டு முக்கியமான அணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஜி.கே.வாசன்!
அதே போல், தமிழகம் முழுவதையும் மண்டங்கலாக பிரித்து சென்னை உள்பட 26 மாவட்டம் மற்று 78 தொகுதிகளை வடக்கு மண்டலமாக பிரித்து நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். மதுரை உள்பட 19 மாவட்டம் 58 தொகுதிகளை தென் மண்டலாமாக பிரிக்கப்பட்டிருக்கிறத. கோவை உள்பட 23 மாவட்டம் 61 தொகுதிகள் கொங்குமண்டலமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி, தஞ்சை உள்பட 9 மாவட்டங்கள், 37 தொகுதிகள் டெல்டா மண்டலமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டலங்களுக்கெல்லாம் மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் ஜி.கே.வாசன்.
தமிழ் மாநில காங்கிரசில் உள்ள நிர்வாகிகளையும், சில அணிகளையும் கூண்டோடு கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை அதிரடியாக நியமித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். இந்த நியமனங்கள் தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், தமாகா 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது. 1996ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததற்கு த.மா.கா.வின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த நிலையில்தான், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாகவும், கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக த.மா.கா.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய நிர்வாகிகளை சந்தித்து, கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
எனவே, வரவிருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பங்கு மிக முக்கியமாக இருக்கும். அதற்கான வேலைகளில் நிர்வாகிகளும் தொண்டர்களும் களத்தில் இறங்கியிருக்கிறோம். எங்களுக்கு அத்தனை உத்வேகத்தையும் தலைவர் ஜி.கே.வாசன் கொடுத்து வருகிறார்’’ என்றனர்.
யார் யாரோ கட்சி ஆரம்பித்து முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் போது, கறைபடியாத கட்சிக்கு சொந்தக்காரரான ஜி.கே.வாசன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது வரவேற்கக்கூடிய விஷயம்தானே..?