போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தில், 21 கோடி ரூபாயை, ஜாபர் சாதிக் சில முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது, ‘‘ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது.
இது, போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம் என்பதை, ஜாபர் சாதிக் உறுதி செய்துள்ளார். அமீனா பானுவை வரவழைத்தும் விசாரித்துள்ளோம். தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெளிநாடுகளில் இருந்து, அமீனா பானுவின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஜாபர் சாதிக்கின் இரண்டாவது தம்பி மைதீன் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள பண வரவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஜாபர் சாதிக் வாயிலாக, சில முக்கிய புள்ளிகளுக்கு, 21 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விசாரணையை பாதிக்கும் என்பதால், அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.
போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணம், பேரீச்சம் பழம் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில், முக்கிய நபராக மார்க்க நெறியாளர் என்று, கூறப்படும் அப்துல் பாசித் உள்ளார்; அவரையும் விசாரிக்க உள்ளோம்.
ஜாபர் சாதிக் வலதுகரமாக, சென்னை ஆவடியைச் சேர்ந்த ஜோசப், 45, மற்றும் ஆயிஷா, 38, ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பை ஜோசப்பிடம் ஒப்படைத்துள்ளார். அதை வாக்குமூலமாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொடர்புகளை ஜோசப் மற்றும் அவரது மனைவி ஆயிஷா ஆகியோரின் வங்கி கணக்கு விபரங்கள் உறுதி செய்கின்றன. ஜாபர் சாதிக், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறார். அவரது தம்பி மைதீனுக்கு, ‘சம்மன்’ அனுப்பியும் தலைமறைவாக உள்ளார்’’இவ்வாறு அவர்கள் கூறினர்.
எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகளின் முழு விசாரணைக்குப் பிறகு, முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.