‘செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை எப்போது விசாரிப்பார்கள் என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும்’ என அவரது வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனுவானது தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனிடையே அவருடைய நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக ஜாமீன் மனு 48ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் அவருக்கு இதய பகுதியில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மறுபக்கம் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனிடையே குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கூறிய நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதே வேளையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்திலும் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே மனு மீது மனு என தாக்கல் செய்ய வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் கடிந்து கொண்ட நிலையில் அவருடைய ஜாமீன் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஏ.எஸ்.ஓகா மற்றும் ஏ.ஜி. மஸி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் செந்தில் பாலாஜிக்காக மேற்கொண்ட தனது வாதத்தில் கூறுகையில் எனது உடல் நிலை பலவீனமடைந்துள்ளது. நான் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. ஆனாலும் இதுவரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அமலாக்கத் துறையிடம் சியாகேட் நிறுவனத்தின் ஹார்ட் டிஸ்க் இருப்பதாகவும் அது செந்தில் பாலாஜியினுடையது என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை அது குறித்து அமலாக்கத் துறை தெரிவிக்கவே இல்லை. எச் பி ஹார்ட் டிஸ்கில் என்னென்ன கிடைத்தன என்பதும் தெரியவில்லை.
தடயவியல் துறை அறிக்கையின் படி அமலாக்கத் துறை சோதனையின் போது செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் அமலாக்கத் துறை சொல்வது போல் எந்த புகார்களும் இல்லை. அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என தெரியவில்லை. அது போல் எப்போது விசாரித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்து கடவுளுக்குத்தான் தெரியும் என ரோத்தகி விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கானது வரும் புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.